எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிப்பு ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு

ஆண்டிப்பட்டி அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-16 03:38 GMT
ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே அரசியல் சம்பந்தமான போஸ்டர் களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்தை முதல்- அமைச்சராக சித்தரித்தும், நடிகர் விஜயை அரசியலுக்கு அழைத்தும் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தநிலையில் ஆண்டிப்பட்டி அருகே குன்னூர் டோல்கேட் பகுதியில் தமிழ்நாடு நேதாஜி சுபாஷ் சேனை என்ற அமைப்பின் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக போஸ்டர் ஒன்று சுவரில் ஒட்டப்பட்டு இருந்தது.

அந்த போஸ்டரில் “எடப்பாடியாரை புறம் பேசுபவர்கள் இதை படித்த பின்னராவது திருந்தட்டும்” என்ற தலைப்பில் அரசின் சார்பில் செய்யப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் பட்டியலிடப்பட்டு இருந் தது.

போஸ்டர் கிழிப்பு

மேலும் “மக்களின் முதல்-அமைச்சர் எடப்பாடியாரை குறை சொல்லக் கூடாது”, “மீண்டும் எடப்பாடி, வேண்டும் எடப்பாடி” போன்ற வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இதுதவிர அதில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோரின் படங்களும் இருந்தன.

இதற்கிடையே முதல்- அமைச்சருக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட அந்த போஸ்டர், ஒட்டப்பட்ட சிறிது நேரத்திலேயே கிழிக்கப்பட்டது. ஆனால் அவற்றை யார் கிழித்தார்கள் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்