ரெயில்வே துறை தனியார்மயத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை ரெயில் நிலையம் முன்பு, ரெயில்வே தனியார்மயமாக்கப்படுவதை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தினர் நேற்று வாயில் கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-16 12:15 GMT
மதுரை,

ரெயில்வே துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்து ரெயில்வே தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் சார்பில் தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட மதுரை, திருச்சி, சென்னை, சேலம், திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு கோட்டங்களில் தொடர் போராட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை ரெயில்நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு உதவி கோட்ட செயலாளர் ராம்குமார் தலைமை தாங்கினார். ரெயில் என்ஜின் டிரைவர்கள் பிரிவு செயலாளர் அழகுராஜா தலைமை தாங்கினார். கோட்டத்தலைவர் ரவிசங்கர் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ரெயில்வே பணியாளர்கள் வாயில் கருப்புத்துணி கட்டி கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது. ரெயில்வே துறை லாபத்துடன் இயங்கி வருகிறது. ஆனால், தனியாரை அனுமதித்தால் நாளுக்கு ஒரு கட்டணம், கூட்ட நெரிசல் மிக்க நேரங்களில் ஒரு கட்டணம் என கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை ஏற்படும். எனவே, மத்திய அரசு ரெயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், உதவி கோட்ட செயலாளர் சுந்தர்கணேஷ், கோட்டத்தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்