தி.மு.க. பிரமுகரை கொலை செய்ய முயன்ற வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் வாலிபர் சரண்

தி.மு.க. பிரமுகரை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்ட வாலிபர், விழுப்புரம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

Update: 2020-09-16 11:45 GMT
விழுப்புரம்,

சென்னை மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வனஜாதனசேகரன். தி.மு.க.வை சேர்ந்த வேங்கைவாசல் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான இவருடைய வீட்டின் மீது கடந்த 3-ந் தேதியன்று காரில் வந்த 2 பேர், திடீரென நாட்டு வெடிகுண்டுகளை வீசிச்சென்றனர்.

இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சென்னை புதுபெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கிற ஓட்டேரி கார்த்திக் (வயது 27), ராஜேஷ் (29) ஆகியோர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியதும், முன்விரோதம் காரணமாக இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக கார்த்திக், ராஜேஷ் ஆகியோர் மீது கொலை முயற்சி, நாட்டு வெடிகுண்டு வீசுதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் வலைவீசி தேடி வந்தனர்.

போலீசார் தன்னை தேடுவதை அறிந்த கார்த்திக் நேற்று விழுப்புரம் முதலாவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து நீதிபதி அருண்குமார் உத்தரவின்பேரில் கார்த்திக், விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சரண் அடைந்த இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்