7-ம் வகுப்பு மாணவி தூக்க மாத்திரை தின்று தற்கொலை முயற்சி போக்சோ சட்டத்தில் தாய்-மகன் கைது

திருச்சியில், காதல் கடிதம் கொடுத்து தொல்லை செய்ததால் 7-ம் வகுப்பு மாணவி தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயற்சித்தார். இதையடுத்து அவருக்கு தொல்லை கொடுத்த வாலிபர் மற்றும் அவரது தாய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-09-17 00:41 GMT
பொன்மலைபட்டி,

திருச்சி செம்பட்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். பால்வியாபாரி. இவரது மனைவி லட்சுமி (வயது 42). இவர்களின் மகன் சிவா என்ற ராஜரத்தினம் (20). இவரும் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் 7-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியை, காதலித்து வந்துள்ளார்.

அந்த மாணவி தினமும் தனது வீட்டு அருகே உள்ள மாநகராட்சி தெரு குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க செல்வது வழக்கம். இப்படி, தண்ணீர் பிடிக்க மாணவி சென்றபோது, 2 முறை ராஜரத்தினம் காதல் கடிதம் கொடுத்து, உன்னை நான் காதலிக்கிறேன் என தொல்லை கொடுத்துள்ளார்.

தற்கொலை முயற்சி

அதற்கு மாணவி மறுப்பு ஏதும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜரத்தினத்தின் தாயார், மகன் காதல் வயப்பட்டதை அறிந்து ஆத்திரம் அடைந்தார். கடந்த 14-ந்தேதி, மாணவியின் வீட்டுக்கு சென்ற லட்சுமி, ‘அறியா பருவத்தில் காதல் கேட்குதா?‘ எனக்கூறி அவளை சாதிபெயரை சொல்லி திட்டி கடுமையாக கண்டித்துள்ளார்.

இதனால், மனவேதனை அடைந்த அந்த மாணவி தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து வீட்டில் மயங்கி கிடந்த மாணவியை, பெற்றோர் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தாய்-மகன் கைது

இதுகுறித்து பொன்மலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீஸ் உதவி கமிஷனர் தமிழ்மாறன் நேரடியாக விசாரணை நடத்தினார். விசாரணைக்கு பிறகு லட்சுமி, இவரது மகன் ராஜரத்தினம் ஆகியோர் மீது சிறார் வன்கொடுமை த டுப்பு சட்டத்தின்கீழ் (போக்சோ) மற்றும் எஸ்.சி.எஸ்.டி. சட்டப்பிரிவு ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்