சமூக வலைதளங்களில் குழந்தைகள் ஆபாச படங்களை பதிவேற்றிய கால்நடை ஆய்வாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சமூக வலைதளங்களில் இளம்பெண்களின் ஆபாச படங்களை பகிர்ந்த கால்நடை ஆய்வாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2020-09-17 00:57 GMT
திருச்சி,

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் அருண் (வயது 52). இவர், மணப்பாறை அருகே உள்ள என்.பூலாம்பட்டி கிராமத்தில் கால்நடை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் திருச்சி மாநகர சமூக ஊடகதள பிரிவு போலீசார், இணைய தள குற்றங்களை தடுக்கும் வகையில் கடந்த மாதம் 8-ந் தேதி, சமூக வலைத்தளங்களை கண்காணித்தனர். அப்போது ஆய்வாளர் அருண், தனது முகநூல் உள்ளிட்ட சமூக வலைதள பக்கத்தில் குழந்தைகள் மற்றும் இளம்பெண்களின் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் வைத்திருந்ததும் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து பகிர்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கால்நடை ஆய்வாளர் அருண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

குழந்தைகள் மற்றும் இளம்பெண்களின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த ஆய்வாளர் அருண், சமூக வலைதளத்தை சீர்கேட்டிற்கு தொடர்ந்து பயன்படுத்தி மக்களின் மனதை கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். எனவே, அவர் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என்பதால், திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார், ஆய்வாளர் அருணை ஓராண்டுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு பரிந்துரை செய்தார்.

அதை போலீஸ் கமிஷனர் ஏற்று, நேற்று ஆய்வாளர் அருணை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்