கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் இட்லி பூக்களால் உருவான மயில் உருவம்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இட்லி பூக்களால் உருவான மயில் உருவம் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

Update: 2020-09-17 06:29 GMT
கொடைக்கானல்,

கொரோனா ஊரடங்கு காரணமாக கொடைக்கானல் நகரில் உள்ள பிரையண்ட் பூங்கா கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டது. கோடை சீசனை கருத்தில் கொண்டு அதிக அளவிலான மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டு பூத்துக் குலுங்கின. ஆனால் சுற்றுலா பயணிகள் அனுமதி இல்லாததால் அவற்றை பார்த்து ரசிக்க முடியாமல் போனது. இதனால் பூங்காவில் உள்ள செடிகளில் பூக்கள் இல்லாமல் காணப்படுகிறது.

இதனிடையே தற்போது கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களை கவரும்விதமாக பல்வேறு நடவடிக்கைகளை பிரையண்ட் பூங்கா நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘ஹைட்ரேஞ்சியா’ எனப்படும் இட்லி பூக்களை கொண்டு மயில் உருவமும், ‘போடோகார்ப்பஸ்’ என்ற புற்களைக் கொண்டு தாஜ்மகால் போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள்

மேலும் பூங்காவின் ஒரு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையின் கீழ் பல்வேறு தாவரங்கள் மூலம் படுகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கிறார்கள்.

இதுகுறித்து பூங்கா மேலாளரிடம் கேட்டபோது, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்கள், புற்களால் பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. தற்போது வடிவமைத்துள்ள மயில், தாஜ்மகால் ஆகியவை வருகிற 20-ந்தேதி வரை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்கலாம் என்றார்.

மேலும் செய்திகள்