திருப்பத்தூர் மாவட்டத்தில் டாம்கோ, டாப்செட்கோ கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம் - 4 தாலுகாவில் நடக்கிறது

திருப்பத்தூர் மாவட்டத்தில் டாம்கோ, டாப்செட்கோ கடன் திட்டங்களுக்கான சிறப்பு முகாம் 4 தாலுகாவில் நடக்கிறது என கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-09-17 10:30 GMT
திருப்பத்தூர், 

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவை சார்ந்த மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் டாம்கோ மூலம் தனிநபர் கடன் திட்டம், சுயஉதவிக்குழுக்களுக்கான சிறுகடன் திட்டம், கல்விக்கடன், கறவை மாடு வாங்க கடனுதவி மற்றும் ஆட்டோ கடன் ஆகிய கடனுதவிகள் வழங்கப்படுகிறது.

இத்திட்டங்களின் கீழ் கடன் பெற 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரம், நகர்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக இருத்தல் வேண்டும். டாம்கோ கடனுதவி திட்டங்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பொருளாதார நிலையினை மேம்படுத்தும் வகையில் பொதுகால கடன் திட்டம், சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கான சிறுகடன் வழங்கும் திட்டம், ஆண்கள் சுயஉதவிக்குழு கடன் திட்டம், கறவை மாடு கடன், சிறு, குறு விவசாயிகளுக்கான நீர்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்டம் ஆகிய கடன் உதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டங்களின் கீழ் கடன் பெற 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். டாப்செட்கோ கடனுதவி திட்டங்கள் தாய்கோ வங்கி, தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சி கழகம், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக செயல்படுத்தப்படுகின்றன.

டாம்கோ மற்றும் டாப்செட்கோ திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள், திட்ட அறிக்கை, குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், வங்கிகள் கோரும் தேவையான ஆவணங்கள் மற்றும் ஆதார் அட்டையுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்திட்டங்களுக்கான சிறப்பு முகாம்கள் திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் வருகிற 22-ந்தேதியும், வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் 24-ந்தேதியும், நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் 28-ந்தேதியும், ஆம்பூர் தாலுகா அலுவலகத்தில் 30-ந்தேதியும் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம்களில் கலந்துகொண்டு விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்