சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு: தமிழகத்தில் கொரோனா இறப்பு குறைந்து வருகிறது

தமிழகத்தில் கொரோனா இறப்பு குறைந்து வருகிறது என சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று ஆய்வு மேற்கொண்ட மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு கூறினார்.

Update: 2020-09-18 05:13 GMT
சேலம்,

சென்னையில் இருந்து மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு மற்றும் மருத்துவ குழுவினர் நேற்று திடீரென சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர், அவர்கள் கொரோனா சிகிச்சை அளிக்கும் வார்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஆஸ்பத்திரி டீன் பாலாஜிநாதன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் தனபால் மற்றும் டாக்டர்களுடன் மருத்துவ குழுவினர் கொரோனா வைரஸ் தொற்று குறித்து விளக்கம் கேட்டு அறிந்தனர்.

பேட்டி

இதைத்தொடர்ந்து மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு நோயாளியை ஒரு நர்ஸ் மற்றும் டாக்டர் கண்காணித்து சிகிச்சை அளிக்கிறார்கள். சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 400 செவிலியர்கள் உள்ளனர். கூடுதலாக 100 செவிலியர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நர்ஸ் உதவியாளர், மருத்துவ பணியாளர்களும் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

இங்கு கொரோனாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதால் தற்போது 90 சதவீதம் நோயாளிகள் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்கள். 10 சதவீதம் பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வீடு திரும்பி சென்றவர்களை, அதன் பிறகும் அவர்களை கண்காணித்து தொடர் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இறப்பு குறைந்து வருகிறது

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் இறப்பு குறைந்து வருகிறது. அதனை மேலும் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் வைத்திருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போதியளவு ஆக்சிஜன் இருந்தால் தான் கொரோனா நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க முடியும். மேலும் தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்கிறோம்.

இதுதவிர வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், இரவு நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு வைரஸ் தொற்று பாதித்தவர்களை அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறோம். கொரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் வீடுகளிலே சிகிச்சை எடுத்துக் கொள்ள கூடாது. முன்கூட்டியே நோயாளிகள் காலதாமதமின்றி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். சேலம் அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியும் தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்