அட்காவ் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் தடம் புரண்டது மற்றொரு விபத்தில் பாறாங்கல் மீது மோதிய சரக்கு ரெயில்

அட்காவ் ரெயில் நிலையம் அருகே மின்சார ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. மற்றொரு விபத்தில் பாறாங்கல் மீது சரக்கு ரெயில் மோதியது.

Update: 2020-09-19 23:15 GMT
அம்பர்நாத்,

மும்பையில் இருந்து 95 கி.மீட்டர் தொலைவில் உள்ள அட்காவ் ரெயில் நிலையத்தில் நேற்று காலை 7.28 மணி அளவில் மும்பை நோக்கி மின்சார ரெயில் சென்று கொண்டிருந்தது. ரெயிலில் மாநில அரசின் அத்தியாவசிய பணி ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் பயணம் செய்தனர். அப்போது மின்சார ரெயிலின் நடுப்பகுதியில் இருந்த ஒரு பெட்டி திடீரென தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டது.

இதனால் பலத்த சத்தம் கேட்டதை அடுத்து மோட்டார் மேன் உடனடியாக ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு மீட்பு ரெயிலுடன் அங்கு சென்றனர். பின்னர் தண்டவாளத்தை விட்டு இறங்கிய பெட்டியை தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக வந்த மின்சார ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு மின்சார ரெயில் பெட்டி தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தப்பட்டது. இதன்பின்னர் அந்த ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இதனால் அந்த வழித்தடத்தில் ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.

இதே போல சரக்கு ரெயில் ஒன்று நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் உரணை அடுத்த ஜெசாய் அருகே சென்ற போது தண்டவாளத்தில் கிடந்த பாறாங்கல் மீது மோதி விபத்து ஏற்பட்டது. என்ஜின் மோதிய வேகத்தில் பாறாங்கல் மீது ஏறி நின்றது. இது பற்றி தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த இரு விபத்துகள் குறித்தும் ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்