புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2020-09-19 23:55 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய காலை 8 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று அதிகாலையிலேயே சாரல் மழையில் நனைந்தபடியே ஏராளமான பக்தர்கள் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்ய குவிந்தனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளையும், பெருந்தேவி தாயாரையும் தரிசனம் செய்தனர். உலக மக்கள் நலமாக இருக்க வேண்டியும், கொரோனா தொற்று அடியோடு ஒழிய வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கை கழுவும் திரவம் வழங்கப்பட்டது. வெப்ப பரிசோதனை செய்த பின்னரே கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோவிலுக்குள் பூ, தேங்காய் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் முதியோர்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா தொற்று காரணமாக கோவில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படடுள்ளது. இதையடுத்து அதிக அளவில் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதே போன்று காஞ்சீபுரத்தில் புகழ் பெற்ற உலகளந்தபெருமாள் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், அஷ்டபுஜபெருமாள் கோவில், யதோக்தகாரி பெருமாள் கோவில், சிங்கபெருமாள் கோவில், பாண்டவ தூத பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்