மணப்பாறையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

மணப்பாறையில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-09-20 01:51 GMT
மணப்பாறை,

மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட கோவிந்தராஜபுரம் மற்றும் காந்திநகர் ஒரு பகுதி, கரிகான்குளம் பகுதி ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக முறையாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யவில்லை.

இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை கோவில்பட்டி சாலையில் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

வாக்குவாதம்

அப்போது, நகராட்சி அதிகாரிகள் வந்து உரிய தீர்வு அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளுக்கும்- பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன், சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்