இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தருவோம் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கி தருவோம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

Update: 2020-09-21 04:17 GMT
வாடிப்பட்டி,

மதுரை மாவட்டம் பரவை, பேரூர், கோவில் பாப்பாகுடி, கொடிமங்கலம், மேலமாத்தூர், கீழமாத்தூர், துவரிமான், புதுக்குளம், அச்சம்பத்து ஊராட்சிகளை சேர்ந்த எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் விழா பரவையில் நடந்தது. விழாவிற்கு எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநகர் மாவட்ட செயலாளர் சோலை எம்.ராஜா தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் ராஜா, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ். பாண்டியன், பாண்டியன் கூட்டுறவு அங்காடி தலைவர் ராஜா, முன்னாள் மேயர் திரவியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பார்த்திபன் வரவேற்றார்.

நம்பிக்கை தரும் இயக்கம்

இந்த விழாவில் நிவாரண உதவி தொகுப்பினை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. மட்டுமே எல்லோருக்கும் நம்பிக்கை தரும் இயக்கமாக இருக்கிறது. சாதி, மத, பேதமற்ற குடும்ப ஆட்சி இல்லாத உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு மரியாதை கொடுத்து இடம் தரப்படுகிறது. ஜெயலலிதா இருந்தபோது அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரையும் பதவியில் அமர்த்தவில்லை. அடிமட்ட தொண்டனுக்கும் பதவி வழங்கி அழகு பார்த்தார்.

தற்போது நதிக்கு இருகரை இருப்பது போல் கழகத்திற்கு பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வருகிறார்கள். தி.மு.க.வில் தொண்டர்களுக்கு மதிப்பில்லை. உதயநிதி இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். தி.மு.க. இளைஞர்களை ஏமாற்றி வருகிறது. தி.மு.க.வினர் அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கு ஆட்சிக்கு வர துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் மாணவர்கள் 55 லட்சம் பேருக்கு லேப்டாப், 2 கோடி பேருக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டுள்ளன. இதுபோல் பல நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. கடின உழைப்பாளிகளுக்கு பதவிகள் தானாக தேடி வரும். இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பேரூர் நிர்வாகிகள் நடராஜன், சவுந்தரபாண்டியன், மாநகர நிர்வாகிகள் சரவணன், பெரிய செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர், முடிவில் மாநில நிர்வாகி சித்தன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்