ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சிவராஜ் மரணம்

ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சிவராஜ் மரணமடைந்தார்.

Update: 2020-09-21 05:46 GMT
திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பெருமாள் நாயக்கர் தெருவில் வசித்து வந்தவர் சிவராஜ்(வயது 65). முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் குளியல் அறையில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். உடன் அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவராஜ் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு இறந்தார். இவர் கடந்த 1984-ம் ஆண்டு ரிஷிவந்தியம் தொகுதியில் இருந்து சட்டமன்றத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 1996-ம் ஆண்டு த.மா.கா. சார்பிலும், 2001 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிவராஜ் வெற்றி பெற்றார். மேலும் த.மா.கா மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராகவும் இருந்தார்.

இன்று அடக்கம்

ஜி.கே.முப்பனாரின் தீவிர ஆதரவாளரான இவர் 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டபோது தன்னை எதிர்த்து போட்டியிட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திடம் தோல்வி அடைந்தார். கட்சி மேலிடம் மீது கொண்ட அதிருப்தி காரணமாக மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த சிவராஜ் பின்னர் அங்கிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக பணியாற்றி வந்தார். மேலும் சட்டமன்ற பொதுகணக்கு குழு தலைவராகவும், திருக்கோவிலூர் நிலவள வங்கியின் தலைவராகவும், அரசு கபிலர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராகவும் இருந்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சிவராஜியின் உடல் இன்று(திங்கட்கிழமை) மாலை 4 மணியளவில் திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றங்கரையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இவருக்கு அமுதா என்கிற மனைவியும், பிரபு என்கிற மகனும், வாணி என்கிற மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்