திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2020-09-21 06:30 GMT
திருவண்ணாமலை,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளது. மேலும் மதவழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு கடந்த 1-ந்தேதி முதல் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். கோவிலில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்வதற்காக கோவில் நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

உடல் வெப்ப பரிசோதனை

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ், கார், மோட்டார் சைக்கிள் போன்றவை மூலம் பொதுமக்கள் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக வந்தனர்.

திருவண்ணாமலையில் நேற்று அவ்வப்போது சாரல் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தபடி நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் ராஜகோபுரத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பக்தர்கள் தங்கள் கொண்டு வந்த அடையாள அட்டையை காண்பித்துவிட்டு சென்றனர். அடையாள அட்டை இல்லாதவர்கள், 10 வயதிற்கு கீழ் மற்றும் 65 வயதிற்கு மேல் உள்ள பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்