அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திண்டுக்கல்லில் கலெக்டர் ஆய்வு

அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்தை கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2020-09-22 03:11 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் திங்கட்கிழமை தோறும் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது.

இதில் திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தை கலெக்டர் விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு அவர் வழங்கினார். பின்னர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இந்திரவள்ளி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் தாசில்தார் கண்ணன், தலைமையிடத்து துணை தாசில்தார் சுகந்தி உள்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 16 மனுக்கள் பெறப்பட்டன.

பழனி

பழனி தாலுகா அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சப்-கலெக்டர் (பொறுப்பு) அசோகன் தலைமையிலான அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர். இந்நிலையில் பழனி மேற்கு கிரிவீதி ஏ.செட்டிமடம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மனு அளித்தனர்.

கொடைக்கானலில் உள்ள தாலுகா அலுவலகத்தில் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் தாசில்தார் அரவிந்த், வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த், வட்டார வளர்ச்சி அதிகாரி கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 72 மனுக்கள் பெறப்பட்டன.

நிலக்கோட்டை

நிலக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு) ராஜராஜன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் யூஜின் முன்னிலை வகித்தார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.

குஜிலியம்பாறை தாலுகா அலுவலகத்தில் பயிற்சி உதவி கலெக்டர் விஸ்வநாதன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. தாசில்தார் சக்திவேலன் முன்னிலை வகித்தார். வேடசந்துார் தாலுகா அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்களிடம் இருந்து 48 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

தாலுகா அலுவலகங்களில் மனு கொடுக்க வந்த பொதுமக்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள கிருமிநாசினியும் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்