மதுரையில் உற்சாக வரவேற்பு: எடப்பாடி பழனிசாமி இன்று ராமநாதபுரம் வருகை

நேற்று மதுரை வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் இன்று, ராமநாதபுரம் சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார்.

Update: 2020-09-22 03:48 GMT
ராமநாதபுரம்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக அவர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு 5 மாதங்கள் கழித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமானத்தில் பயணம் செய்ததால் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், கே.பி.கந்தன், சோமசுந்தரம், பெரும்பாக்கம் ராஜசேகர் உள்பட அ.தி.மு.க.வினர் விமானம் நிலையம் செல்லும் வழி நெடுகிலும் நின்று முதல்-அமைச்சரை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, பின்னர் விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்டு வந்தார்.

அமைச்சர்கள் வரவேற்பு

மதுரை விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ, கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷனர் விசாகன், எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், சரவணன், பெரியபுள்ளான், நீதிபதி மற்றும் அதிகாரிகள் பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு, பழைய விமான நிலையம் அருகே மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அப்போது மீனாட்சி அம்மன் கோவில், திருப்பரங்குன்றம், அழகர்கோவிலில் இருந்து வந்த பிரசாதம் வழங்கப்பட்டது. திரளான பெண்கள் பூரண கும்பத்துடன் வரவேற்றனர்.

அதை தொடர்ந்து பெருங்குடியில் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன்செல்லப்பா தலைமையில் இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்று நினைவுப்பரிசு வழங்கினார்கள்.

மதுரை சொக்கிக்குளம் டி.வி.எஸ். பங்களாவிற்கு வந்த முதல்-அமைச்சருக்கு மேளதாளம் முழங்க மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று ராமநாதபுரம் செல்கிறார்

நேற்று இரவு மதுரையில் தங்கிய எடப்பாடி பழனிசாமி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணி அளவில் கார் மூலம் மதுரையில் இருந்து புறப்பட்டு ராமநாதபுரம் செல்கிறார். காலை 10 மணி அளவில் அங்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ராமநாதபுரம் மாவட்டத்தில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். 10.20 மணிக்கு பயனாளிகளுக்கு பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதனை தொடர்ந்து ஆய்வு கூட்ட அரங்கிற்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமி, 10.30 மணி முதல் 11.30 மணிவரை மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் கலெக்டர் கொ.வீரராகவராவ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு நடத்துகிறார்.

11.30 மணிக்கு சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். 11.45 மணிக்கு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு நடத்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 12.15 மணிக்கு மகளிர் சுயஉதவிக்குழுவினருடன் கலந்து ஆலோசிக்கிறார்.

விழாக்கோலம்

அதன்பின்னர் 12.30 மணி அளவில் நிருபர்களை சந்தித்து பேசுகிறார். இதனை தொடர்ந்து 1 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதல்-அமைச்சர், அங்கிருந்து 1.30 மணிக்கு புறப்பட்டு காரில் சாலை மார்க்கமாக மதுரை செல்கிறார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராமநாதபுரம் வருவதையொட்டி நிகழ்ச்சிகள் நடைபெறும் கலெக்டர் அலுவலக வளாக பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அந்த பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பளிச்சென்று காட்சி அளிக்கிறது. எடப்பாடி பழனிசாமி ஆய்வுகூட்டத்திற்கான ஏற்பாடுகளை கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் கூடுதல் கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் செய்தனர்.

ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மயில்வாகனன் மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் ஏராளமான போலீசார் நேற்று பிற்பகலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

வரவேற்பு ஏற்பாடு

ராமநாதபுரம் வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மாவட்ட எல்லையான பார்த்திபனூரில் இருந்து ராமநாதபுரம் வரை வழிநெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்க அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, எம்.எல்.ஏ.க்கள் ராமநாதபுரம் டாக்டர் மணிகண்டன், பரமக்குடி சதன்பிரபாகர், முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, மாநில மகளிர் அணி செயலாளர் கீர்த்திகா முனியசாமி உள்பட அனைத்து நிர்வாகிகளும் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்