கொரோனா குறித்து மாறுபட்ட சான்றிதழ்: கணவனை இழந்த பெண் 3 குழந்தைகளுடன் கலெக்டரிடம் மனு

கொரோனா குறித்து மாறுபட்ட சான்றிதழ்: கணவனை இழந்த பெண் 3 குழந்தைகளுடன் கலெக்டரிடம் மனு.

Update: 2020-09-22 04:00 GMT
மதுரை,

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள ஆண்டிவடன் செட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவேல் (வயது 33). இவருக்கு ரேவதி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். வடிவேல் கடந்த 6-ம் தேதி நெஞ்சு வலி காரணமாக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு காய்ச்சல் இருந்ததால் மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அன்று இரவே உயிரிழந்தார். அரசின் வழிகாட்டுதலின்படி வடிவேலுவின் உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

இந்த நிலையில் மதுரை மாநகராட்சி சுகாதாரப்பிரிவு சார்பில் கொடுக்கப்பட்ட சான்றிதழில் வடிவேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால் மதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் வடிவேலுக்கு கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளது.

இதையடுத்து மதுரை கலெக்டர் அலுவலகம் வந்த ரேவதி, தனது கணவர் இறப்பில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாகவும், 3 குழந்தைகளுடன் வாழ்வாதார பாதிப்புக்குள்ளாகி உள்ளதாகவும் கலெக்டர் வினயிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர், கொரோனா மருத்துவமனை சார்பில் வழங்கப்படும் சான்றிதழ் மட்டுமே உறுதியானது, மாநகராட்சி வழியே கொடுக்கப்பட்ட சான்றிதழ் குறித்து விசாரிக்கப்படும் என்றும், அவரது குடும்பத்துக்கு தேவையான உதவிகள் தொண்டு நிறுவனத்தின் மூலம் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். மாறுபட்ட சான்றிதழ் காரணமாக வடிவேலின் முகத்தை கூட அவரது குடும்பத்தினர் பார்க்க முடியவில்லை என வேதனை அடைந்தனர்.

மேலும் செய்திகள்