ஆண்டிப்பட்டி அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

ஆண்டிப்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-22 22:15 GMT
கண்டமனூர், 

ஆண்டிப்பட்டி அருகே ஒக்கரைப்பட்டி காலனி பகுதியில் சுமார் 500 பேர் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகளின் மின் மோட்டார் பழுதானது. இதனால் ஒக்கரைப்பட்டி காலனி பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. 

இதனால் குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இதனால் மின் மோட்டாரை சரி செய்து குடிநீர் வழங்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த காலனி பொதுமக்கள் நேற்று குடிநீர் கேட்டு கன்னியப்பாபிள்ளைபட்டி-ஜி.உசிலம்பட்டி சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் வீரழகம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயகாந்தன் மற்றும் ராஜதானி போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மின் மோட்டாரை விரைவில் சரிசெய்து குடிநீர் சீராக வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்