வடகிழக்கு பருவமழை காலங்களில் உயிர்ச் சேதங்களை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் - கலெக்டர் திவ்யதர்ஷினி வேண்டுகோள்

வடகிழக்கு பருவமழை காலங்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயிர்ச்சேதங்களை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கலெக்டர் திவ்யதர்ஷினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2020-09-22 23:00 GMT
ராணிப்பேட்டை,

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பரவலாக இடி, மின்னலுடன் பெய்து வருவதாலும், வருகிற அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் பெரு மழையின் காரணமாகவும், மின்னல் தாக்கியும் உயிரிழப்புகள் ஏற்படாமலும், உடைமைகளுக்கு சேதம் ஏற்படாமலும் தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதுகுறித்து கலெக்டர் திவ்யதர்ஷினி தெரிவித்திருப்பதாவது:-

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் மழைக்காலங்களில் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மழை மற்றும் இடி, மின்னலின் போது நீர்நிலைகளில் குளிப்பதையும், வெளியில் வருவதையும், மரங்களின் கீழ் நிற்பதையும், ஆடு, மாடுகளை மின்கம்பங்களில் கட்டுவதையும் தவிர்க்க வேண்டும். மேலும் பாழடைந்த கிணறுகள், கைவிடப்பட்ட கல்குவாரிகள், ஆற்றுப் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் ஆகியவற்றில் குளிப்பதை தவிர்க்குமாறும், தங்கள் குழந்தைகள் மேற்கூறிய இடங்களில் குளிக்க செல்லாமல் இருப்பதை பொதுமக்கள் கண்காணிக்க வேண்டும்.

மழைக் காலங்களில் மின்கம்பிகள் அறுந்து உள்ளதை கண்டால் உடனுக்குடன் மின் துறையினருக்கு 1912 என்ற 24 மணி நேரமும் இயங்கக் கூடிய இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அப்பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்தை தடுத்து உயிர்சேதம் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் விவசாயிகள் சட்டவிரோதமாக தங்களது வயல் வெளிகளில் விலங்கினங்கள் வந்து பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க மின்வேலி அமைப்பதை தவிர்க்க வேண்டும். மின்வேலி அமைத்தால் அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். மின்கம்பங்கள் கீழே விழும் நிலையில் இருந்தாலும், மின்கம்பிகள் தாழ்வாக இருந்தாலும், பயன்பாட்டில் இல்லாத அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் பழுதடைந்து இடிந்து விழக் கூடிய நிலையில் இருந்தாலும், மழைக்காலங்களில் மழைநீர் பெருமளவு தேங்கி பொதுமக்கள் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படும் வகையில் இருந்தாலும், அது குறித்து உடனடியாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 6 தாலுகா அலுவலகங்களிலும் உள்ள கட்டுப்பாட்டு அறைகளை தொடர்பு கொள்ளலாம்.

அரக்கோணம் 04177-236360, 9445000507, ஆற்காடு 04172-235568, 9445000505, வாலாஜா 04172-232519, 9445000506, சோளிங்கர் 04172-290800, 9943766539, நெமிலி 04177-247260, 8015137003, கலவை 9789641611 என்ற எண்களுக்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 04172-273166, 273189 என்ற எண்களுக்கோ தெரியப்படுத்தலாம். மேலும் நிகழ்வுகளை அவ்வப்போது படம் பிடித்து அல்லது வீடியோ வடிவில் 9489668833 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் அனுப்பலாம்.

மேற்கண்டவற்றை பின்பற்றி தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயிர் சேதங்களை தவிர்க்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்