தந்தை-மகன் கொலை வழக்கு: சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை

தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முக்கிய தடயங்களை ஆய்வு செய்தனர்.

Update: 2020-09-23 04:36 GMT
சாத்தான்குளம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக முதலில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கொலை வழக்குப்பதிவு செய்து, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 பேரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

ஐகோர்ட்டு உத்தரவு

இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். வியாபாரிகளின் குடும்பத்தினர், நண்பர்கள், போலீசார் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பிறகு சி.பி.ஐ. அதிகாரிகள் அவ்வப்போது சாத்தான்குளம் வந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் இது தொடர்பாக கடந்த முறை விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில், சி.பி.ஐ. விசாரணை எப்போது முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் களம் இறங்கி உள்ளனர்.

சாட்சிகளிடம் விசாரணை

அதன்படி, சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் 17 பேர் அடங்கிய குழுவினர் கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையில் நேற்று அதிரடியாக சாத்தான்குளத்துக்கு வந்தனர். அவர்கள், வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் கடைக்கு சென்றனர். அங்கு அவர்கள் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ள போலீஸ் ஏட்டுகள் ரேவதி, பியூலா செல்வகுமாரி, வக்கீல்கள் ரவி, மணிமாறன், ராஜாராம் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது சாட்சிகள், கடையில் இருந்து ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் நிலையத்துக்கு சென்ற சம்பவம் தொடர்பாக நடித்துக் காட்டினர். அதை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் குழுவினர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சம்பந்தப்பட்ட மருத்துவ குழுவினரிடம் விசாரணை நடத்தினர். அங்கு தடயங்களை ஆராய்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கும் சாட்சிகளை அழைத்து சென்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், முக்கிய தடயங்களையும் ஆய்வு செய்தனர். காலை 11.30 மணிக்கு தொடங்கிய விசாரணை இரவு 7 மணி வரை நீடித்தது. சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்