கொரோனாவை தடுக்க விதி முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் - இணை இயக்குனர் சித்ரா அறிவுரை

கொரோனாவை தடுக்க விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று நலப்பணிகள் இணை இயக்குனர் சித்ரா கூறியுள்ளார்.

Update: 2020-09-23 22:30 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயிர்காக்க தேவையான ஊசி மருந்து, மாத்திரை போன்றவை தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டால் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உடனடியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு முக்கியமாக ஆக்ஸிஜன் அதிக அளவு தேவைப்படுகிறது. ஆக்ஸிஜன் தேவையை கருத்தில் கொண்டு அதிக ஆக்ஸிஜன் வழங்கும் தொட்டிகள் அரசு மருத்துவமனைகளில் இப்போது அமைக்கப்பட்டு வருகிறது. ஆக்ஸிஜன் வசதி குறித்து திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் நலப்பணிகள் இணை இயக்குனர் சித்ரா ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கு முக்கியமான சிகிச்சையில் ஒன்று மூச்சு திணறல் ஏற்படும் போது ஆக்ஸிஜன் கொடுப்பது தான். அந்த ஆக்ஸிஜன் அதிக அளவு தேவைப்படுவதால் தற்போது ஆக்ஸிஜன் அதிக படியாக சேமித்து வைத்து தடையின்றி ஆக்ஸிஜன் வழங்க திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளது. நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நிலையில், பெரிய அளவிலான ஆக்சிஜன் தொட்டி அமைக்கும் பணி துரித நிலையில் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் அனைத்து நோயாளிகளுக்கும் தடையின்றி ஆக்ஸிஜன் வழங்க முடியும். இதனால் கொரோனா நோயாளிகளின் இறப்பை தடுக்கலாம்.

சிறந்த முறையில் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவமனை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் .இருந்தாலும் மக்கள் ஒத்துழைப்பு அவசியம். கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், தொண்டைவலி, மூச்சு திணறல், அதிகபடியான உடல் வலி, உடல் சோர்வு இருந்தால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

கொரோனா இருப்பது தெரிந்தவுடன் மருத்துவனைக்கு சென்று எக்ஸ்ரே மற்றும் ரத்த பரிசோதனை செய்து கொண்டு டாக்டரின் அறிவுரை படி மருத்துவமனையிலோ அல்லது கொரோனா நோய் தனிமைபடுத்தும் மையத்திலோ இருந்து நோயை குணப்படுத்தி கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையில் மருத்துவமனைக்கு வரும் நபர்கள் நல்லபடியாக குணம் அடைந்து வீடு திரும்புகிறார்கள். மேலும் பொதுமக்கள் கொரோனாவை தடுக்க அரசின் விதிமுறைகளான முககவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவதை கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது திருச்செங்கோடு மருத்துவ அலுவலர் தேன்மொழி நாமக்கல் மாவட்ட தேசிய நல குழுமத்தின் முதன்மை அலுவலர் வெங்கடேஷ், கொரோனா கவனிப்பு மையத்தின் முதன்மை அலுவலர் மோகனபானு ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்