சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி: புதுச்சேரியில் 60 ஐம்பொன் சாமி சிலைகள் பறிமுதல் - 14 கற்சிலைகளும் பிடிபட்டன

புதுச்சேரியில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக 60 ஐம்பொன் சாமி சிலைகள், 14 கற்சிலைகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2020-09-24 23:30 GMT
புதுச்சேரி,

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2016-ம் ஆண்டு சிலை கடத்தல் வழக்கில் சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தீனதயாளன் என்பவரை கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் மற்றும் பழங்கால சாமி சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் புதுச்சேரியில் இருந்து ஒருசில சாமி சிலைகளை வாங்கி இருப்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் அப்போது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு புதுவை உப்பளம் கோலாஸ் நகரில் 11 ஐம்பொன் சிலைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மேரி தெரசா வனினா ஆனந்தி என்பவரை கைது செய்தனர்.

இந்தநிலையில் மேரி தெரசா வனினா ஆனந்தியின் சகோதரரான ஒயிட் டவுன் ரோமண்ட் ரோலண்ட் வீதியில் வசித்து வரும் ஜுன்பால் ராஜரத்தினம் என்பவரது வீட்டிலும் சாமி சிலைகள் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

ஆனால் அதற்கு முன் தனது வீட்டில் இருக்கும் சிலைகள் தொடர்பாக ஜுன்பால் ராஜரத்தினம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தன்னிடம் உள்ள சிலைகள் அனைத்தும் தனக்கு சொந்தமானது என தெரிவித்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த 2016-ம் ஆண்டு தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங், ஐ.ஜி. டி.எஸ்.அன்பு ஆகியோர் உத்தரவின் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று புதுச்சேரி ரோமண்ட் ரோலண்ட் வீதியில் உள்ள ஜுன்பால் ராஜரத்தினம் வீட்டில் அதிரடி சோதனை நடந்தது.

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜோஸ், அசோக் நடராஜன் ஆகியோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று காலை 9.30 மணி முதல் மாலை 2 மணி வரை ஜுன்பால் ராஜ ரத்தினம் வீட்டில் ஒவ்வொரு அறையிலும் அங்குலம் அங்குலமாக அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அப்போது வீட்டை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஜுன்பால் ராஜரத்தினம் வீட்டில் இருந்து நடராஜர், நடமாடும் சிவன், பார்வதி, அம்மன், விநாயகர், பிச்சாண்டவர், அர்த்தநாரீஸ்வரர், சம்பந்தர் உள்பட 60 ஐம்பொன் மற்றும் உலோக சிலைகள், 14 பழங்கால கற்சிலைகள் என மொத்தம் 74 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த சிலைகள் புதுச்சேரி நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டு அதற்கான சான்றிதழ் பெறப்பட்டது. இதன்பின் அவற்றை தமிழகத்திற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கொண்டு சென்றனர். அந்த சிலைகளை கும்பகோணம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்