இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி நடந்தது

கோட்டூரில் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-25 02:23 GMT
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியத்தில் 2018-2019-ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு 29 வருவாய் கிராமங்களில் இழப்பீடு தொகை வழங்கவில்லை. இதனை கண்டித்தும், உடனடியாக பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தியும் கோட்டூர் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். துணை செயலாளர் செந்தில்நாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெயராமன், பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மஞ்சுளா, ஊராட்சி மன்ற தலைவர் அறிவுடைநம்பி, கூட்டுறவு சங்க தலைவர் சிவசண்முகம், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் உஷா, இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் நல்லசுகம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் உத்திராபதி, துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி, வேளாண்மை உதவி இயக்குனர் தங்கதுரை ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாவட்ட கலெக்டர் மூலம் விடுபட்ட 29 வருவாய் கிராமங்களுக்கு உரிய பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.

மேலும் செய்திகள்