மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-09-25 04:57 GMT
மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் மாதம் முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசனத்தின் தேவைக்கேற்ப அதிகரித்தோ அல்லது குறைந்தோ திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த மாதம் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

இந்த மழையின் காரணமாக டெல்டா பாசன பகுதிகளில் தண்ணீர் தேவை குறைந்தது. இதனால் டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

திறப்பு அதிகரிப்பு

இந்த நிலையில் தமிழகத்தில் மழை பெய்வது குறைந்ததால், டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்தது. இதனை கருத்தில் கொண்டு கடந்த 18-ந் தேதி முதல் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனிடையே டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை மேலும் அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு நேற்று மதியம் முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

நீர்வரத்து குறைந்தது

கடந்த சில நாட்களாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதாவது கடந்த 2 நாட்களுக்கு முன்பு அணைக்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி வரை வந்து கொண்டு இருந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 49 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இந்த நீர்வரத்து மேலும் குறைய வாய்ப்புள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98.20 அடியாக இருந்தது.

மேலும் செய்திகள்