மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

Update: 2020-09-27 16:13 GMT
மேட்டூர்,

கர்நாடகத்தில் மழை தீவிரமடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி வரை காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது

அதன் அடிப்படையில் கடந்த 21-ந் தேதி முதல் உயர்ந்து வந்த அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் மதியம் 100 அடியை எட்டியது. இதனால் பொதுப்பணித்துறையினர், தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நீர்வரத்து குறைந்தது

இந்த நிலையில் கர்நாடகத்தில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்ததால் அங்குள்ள அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. இதன் எதிரொலியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 24-ந் தேதி காலை அணைக்கு வினாடிக்கு 49 ஆயிரம் கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று முன்தினம் வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

இது நேற்று காலை மேலும் குறைந்து வினாடிக்கு 27 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பாசனத்துக்காக வினாடிக்கு 20 ஆயிரத்து 850 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நீர்வரத்தானது வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடிக்கும் கீழ் குறைந்தால் அணையின் நீர்மட்டம் மீண்டும் குறைய வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்