உலக சுற்றுலா தினத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் மங்கள வாத்தியம் இசைத்து சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு

உலக சுற்றுலா தினத்தையொட்டி தஞ்சை பெரியகோவிலில் மங்கள வாத்தியம் இசைத்து சுற்றுலா பயணிகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. தூய்மையை வலியுறுத்தி தன்னார்வலர்கள் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வும் செய்தனர்.

Update: 2020-09-28 02:30 GMT
தஞ்சாவூர்,

இந்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில் உலக சுற்றுலா தினத்தையொட்டி தஞ்சை பெரிய கோவில் நுழைவுவாயில் அருகில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். விழாவில் 30 கலைஞர்கள் மங்கள வாத்தியமான நாதஸ்வரம், தவில் வாசித்து சுற்றுலா பயணிகளை வரவேற்றனர்.

மேலும் 30-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு தூய்மையின் அவசியம் குறித்த பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பினர். மாலையில் 50-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள், நடன கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி நடைபெற்றது. சுற்றுலா தலங்களை பாதுகாத்திடவும், தூய்மையை வலியுறுத்தியும் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

கருத்தரஙகம்

உலக சுற்றுலா தினத்தையொட்டி தூய்மை வாரம் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இன்று (திங்கட்கிழமை) முதல் 5 நாட்களுக்கு, கருத்தரங்கம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடக்கிறது. முன்னதாக தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு சானிடைசர், கையுறை, முகக்கவசம் ஆகியவை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெயக்குமார், தமிழ்நாடு ஓட்டல் மேலாளர் சிவதாணு, இண்டாக் உறுப்பினர் சங்கர், தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் பெரியகோவில் மேற்பார்வையாளர் செந்தில் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள், தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இண்டாக் செயலாளர் என்ஜினீயர் முத்துக்குமார் செய்திருந்தார். இந்திய சுற்றுலா அமைச்சகம் 5-வது ஆண்டாக இந்த நிகழ்ச்சியை தஞ்சையில் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்