விவசாயி கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த மேலும் ஒருவர் கைது

விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலிப்படையை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-09-28 03:26 GMT
கடமலைக்குண்டு,

கடமலைக்குண்டு அருகே உள்ள மேலப்பட்டியை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன் (வயது 40). விவசாயி. இவரது மனைவி சித்ரா(31). இந்நிலையில் கடந்த வருடம் ராமநாதபுரம் மாவட்டம் பனங்காடு என்ற பகுதியில் செல்லப்பாண்டியன் கொலைசெய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். இந்த கொலை தொடர்பாக கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

செல்லப்பாண்டியன் அவரது மனைவி சித்ராவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு உள்ளார். இதில் கோபமடைந்த சித்ராவின் தந்தையான மகாராஜன் (வயது 65) கூலிப்படையை வைத்து செல்லப்பாண்டியை கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி கூலிப்படையினர் செல்லப்பாண்டியனை வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அழைத்து சென்று கொலை செய்தது தெரியவந்தது.

மேலும் ஒருவர் கைது

இதனையடுத்து மகாராஜன் மற்றும் கூலிப்படையை சேர்ந்த 5 பேரை கடமலைக்குண்டு போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில் செல்லப்பாண்டியன் கொலை வழக்கில் கூலிப்படையை சேர்ந்த சக்திவேல் (30) என்பவரை திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்