வாய்க்கால் தூர்வாராததை கண்டித்து வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை அருகே வாய்க்காலை முறையாக தூர்வாராத பொதுப்பணித்துறையினரை கண்டித்து வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-09-28 22:00 GMT
மயிலாடுதுறை,

மயிலாடுதுறை அருகே அகரமணக்குடியில் செல்லும் கஞ்சாநகரம் வாய்க்கால் பாசனம் மற்றும் வடிகால் வாய்க்காலாக உள்ளது. 5 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் இந்த வாய்க்கால் மணக்குடி, அகரமணக்குடி பகுதியில் வடிகால் வாய்க்காலாகவும், கஞ்சாநகரம், கருங்குயில்நாதன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 1000 ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன வாய்க்காலாகவும் செல்கிறது.

இந்த வாய்க்காலில் 3 கி.மீ. தூரம் வரை தூர்வாரப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 கி.மீ. தூரம் தூர்வாரப்படவில்லை. இதனால் கஞ்சாநகரம் வாய்க்காலில் திறந்து விடப்பட்ட காவிரி தண்ணீர் அகரமணக்குடி கிராமத்தில் உள்ள விளைநிலங்களில் புகுந்தது.

இதனால் 50 ஏக்கரில் நேரடி நெல்விதைக்கப்பட்ட வயல்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கடந்த 10 நாட்களாக தண்ணீர் வடிய வழியில்லாததால் பயிர்கள் அழுகிவிட்டன. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், கஞ்சாநகரம் வாய்க்காலை தூர்வாராத பொதுப்பணித்துறையினரை கண்டித்து தண்ணீர் சூழ்ந்துள்ள அகரமணக்குடி வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக தங்கள் பகுதியில் உள்ள கஞ்சாநகரம் வாய்க்காலை முழுமையாக தூர்வாரி விவசாய பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்