சென்னையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது

சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான உடல் தகுதி தேர்வு தொடங்கியது. கொரோனா இருக்கிறதா? என பரிசோதனை செய்ததற்கான சான்றிதழுடன் வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

Update: 2020-10-01 00:15 GMT
சென்னை,

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 969 ஆண்-பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலைக்கு கடந்த ஜனவரி மாதம் எழுத்து தேர்வு நடந்தது. இதில் சுமார் 5,500 பேர் தேர்வானார்கள். இவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நேற்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் தொடங்கியது. நேற்றைய உடல் தகுதி தேர்வில் கலந்துகொள்ள 600 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.

கொரோனா பரிசோதனை செய்து, ‘நெகட்டிவ்’ என்ற சான்றிதழுடன் வந்தவர்கள் மட்டும் நேற்றைய தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு உயரம் மற்றும் மார்பளவு சரிபார்க்கப்பட்டது. அதில் தேர்வானவர்களுக்கு 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாதவர்களுக்கு, உரிய சான்றிதழுடன் வந்தால் இன்னொரு நாளில் உடல் தகுதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வருகிற 12-ந்தேதி வரை தொடர்ந்து உடல் தகுதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து போலீஸ் (வடக்கு) இணை கமிஷனர் பாண்டியன் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு சியாமளா உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த தேர்வு நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்