6 மாதங்களுக்கு பிறகு தென்காசி தினசரி சந்தை மீண்டும் திறப்பு

6 மாதங்களுக்கு பிறகு தென்காசி தினசரி சந்தை நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

Update: 2020-09-30 23:41 GMT
தென்காசி,

கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி பொது இடங்களில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் தென்காசி தினசரி சந்தை மூடப்பட்டது. இதையடுத்து அங்கு செயல்பட்ட கடைகள், தென்காசி பழைய பஸ் நிலையத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டன.

அங்கு பொதுமக்கள் தினமும் காய்கறிகளை வாங்கி சென்றனர். இதே போன்று புதிய பஸ் நிலையத்திலும் இறைச்சி கடைகள் அமைக்கப்பட்டன. ஊரடங்கில் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், இந்த பஸ் நிலையங்களில் கடைகள் இயங்கி வந்தன.

மீண்டும் திறப்பு

இந்த நிலையில் ஊரடங்கில் அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்ததை தொடர்ந்து மீண்டும் பஸ்கள் ஓடத்தொடங்கின. இதற்கிடையே தென்காசி தினசரி சந்தையை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா உத்தரவின்பேரில், 6 மாதங்களுக்கு பிறகு நேற்று தென்காசி தினசரி சந்தை மீண்டும் திறக்கப்பட்டது. தென்காசி பழைய பஸ் நிலையத்தில் இருந்த காய்கறி கடைகள் அனைத்தும் தினசரி சந்தைக்கு மாற்றம் செய்யப்பட்டன.

அங்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தினசரி சந்தை நுழைவுவாயிலில் நகராட்சி ஊழியர் மூலம் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. முக கவசம் அணியாமல் வந்தவர்களை சந்தைக்குள் அனுமதிக்கப்படவில்லை. தினசரி சந்தை மீண்டும் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோன்று பழைய பஸ் நிலையத்தில் காய்கறி கடைகளை அகற்றியதால், அங்கு பொதுமக்கள் வசதியாக நின்று பஸ்களில் ஏறி சென்றனர்.

மேலும் செய்திகள்