ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வீடு புகுந்து கைவரிசை; பிரபல கொள்ளையன் கைது

ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வீடுகளில் புகுந்து கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்ததுடன், அவனிடம் இருந்து 40 பவுன் நகைகளையும் மீட்டனர்.

Update: 2020-10-01 00:26 GMT
பவானி,

ஈரோடு மாவட்டம் பவானி, ஆப்பக்கூடல், சித்தோடு, கோபி, கவுந்தப்பாடி பங்களாப்புதூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பொருட்கள் திருடும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இதுகுறித்து அந்தந்த பகுதிகளை சேர்ந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தனிப்படை அமைப்பு

இந்த நிலையில் திருட்டு தொடர்பாக கொள்ளையர்களை பிடிக்க பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தேவேந்திரன் (பவானி), கதிர்வேல் (சித்தோடு), சப்-இன்ஸ்பெக்டர்கள் வடிவேல்குமார், வேலுமுத்து, சீரங்கன், பாஸ்கரன், தாமோதரமூர்த்தி, பெரியண்ணன், பூபதி, கண்ணன் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று பவானியை அடுத்த மூன்ரோடு பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

கைது

விசாரணையில், ‘அவர் சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் லல்லு என்கிற லல்லு பிரசாத் (வயது 29) என்பதும், ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடியதும்’ தெரிய வந்தது. போலீசார் மேலும் நடத்திய விசாரணையில், ‘பிரபல கொள்ளையனான அவர் சேலம், மேட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளில் வீடு புகுந்து கைவரிசை காட்டியதும்,’ தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து லல்லுபிரசாத்தை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 40 பவுன் நகைகளையும் மீட்டனர். இந்த கொள்ளை தொடர்பாக லல்லுபிரசாத் கூட்டாளிகள் சிலரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்