ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா ஒருவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தார்.

Update: 2020-10-01 17:43 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மாநகர் பகுதியில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவுகிறது. இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர் பகுதியில் 5 இடங்களில் முகாம்கள் அமைத்து தினமும் 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்கிறார்கள்.

மேலும் பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உடல் பரிசோதனையும் செய்யப்படுகிறது. எனினும் மாநகர் பகுதியில் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. மாவட்டத்தின் மொத்த பாதிப்பில் 60 சதவீதத்துக்கும் மேல் ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

முதியவர் பலி

இதற்கிடையே சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் காய்ச்சல் மற்றும் சளித்தொல்லையால் சிகிச்சைக்காக கடந்த 25-ந்தேதி பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 89 ஆக உயர்ந்துள்ளது.

161 பேருக்கு தொற்று

நேற்று முன்தினம் வரை ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆயிரத்து 642 ஆக இருந்தது. இதில் வெளிமாவட்டங்களை சேர்ந்த 27 பேர் நேற்று பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் புதிதாக 161 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஈரோடு மாவட்டத்தில் 6 ஆயிரத்து 776 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரம் நேற்று ஒரே நாளில் 116 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,117 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 5 ஆயிரத்து 570 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

மேலும் செய்திகள்