தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ராமகோபாலன் மறைவுக்கு அஞ்சலி மவுன ஊர்வலம் செல்ல முயன்ற 50 பேர் கைது

தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் ராமகோபாலன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் மவுன ஊர்வலம் செல்ல முயன்ற 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-10-01 23:50 GMT
தென்காசி,

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மறைவிற்கு தென்காசி நகர இந்து முன்னணி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையொட்டி, நேற்று மாலையில் காந்தி சிலை முன்பு ராமகோபாலன் உருவப்படம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜனதாவினர் சட்டைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடேஷ், நகர தலைவர் நாராயணன், பா.ஜனதா துணைத்தலைவர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

11 பேர் கைது

குற்றாலம் அருகே உள்ள இலஞ்சியில் ராமகோபாலன் உருவப்படம் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் அங்கிருந்து மவுன ஊர்வலமாக இந்து முன்னணியினரும், பா.ஜனதாவினரும் புறப்பட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி தென்காசி ஒன்றிய மாவட்ட பார்வையாளர் மாசானம் தலைமை தாங்கினார். பா.ஜனதா தெற்கு ஒன்றிய தலைவர் முருகன், இந்து முன்னணி நகர தலைவர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்து கொண்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

செங்கோட்டை

செங்கோட்டை தாலுகாஅலுவலகம் அருகில் இந்து முன்னணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் முருகன், பா.ஜனதா மாவட்ட செயலாளர் மாரியப்பன், நகர தலைவர் வேம்புராஜ், விசுவ இந்து பரிஷத் நகர தலைவர் குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டு, ராமகோபாலன் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அனைவரும் மவுன ஊர்வலம் செல்வதற்கு முயன்றனர். அப்போது 144 தடை உத்தரவு அமலில் இருப்பதை போலீசார் சுட்டிக்காட்டி, ஊர்வலம் செல்ல மறுப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார், மவுன ஊர்வலம் செல்ல முயன்ற 39 பேரை கைது செய்து, ஒரு தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

வாசுதேவநல்லூர்

பாவூர்சத்திரம் பஸ் நிலையம் அருகில், ராமகோபாலனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் சாக்ரடீஸ் தலைமை தாங்கினார். பா.ஜனதா ஒன்றிய தலைவர் மாரியப்பன், ஒன்றிய பார்வையாளர் சுடலையாண்டி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சண்முகசுந்தரம், பிச்சையா, பா.ஜனதா மாவட்ட பொருளாதார பிரிவு தலைவர் முத்துராஜ், இளைஞரணி தலைவர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம், அழகாபுரி பாபநாசபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜனதா மாவட்ட செயலாளர் அருட்செல்வன், இளைஞரணி தலைவர் ஜோதி செல்வம், ஒன்றிய தலைவர் மாறவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வாசுதேவநல்லூர் நகர இந்து முன்னணி சார்பாக, ராமகோபாலன் உருவப்படத்திற்கு மாலை அணித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வாசுதேவநல்லூர் நகர தலைவர் ராமச்சந்திரன், நகர துணைத்தலைவர் ஆறுமுகம், ஒன்றிய தலைவர் இசக்கி, பா.ஜனதா தென்காசி மாவட்ட தலைவர் ராமராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடையம்

ஆழ்வார்குறிச்சி பொட்டல்புதூர் பகுதியில் ராமகோபாலனுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி கடையம் ஒன்றிய தலைவர் பாலமுருகன், பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் கண்ணன், விசுவ இந்து பரிஷத் மாவட்ட துணைத்தலைவர் மாரியப்பன், பா.ஜனதா நிர்வாகிகள் தினகரன், பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்