சிதம்பரத்தில் ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமி தேடும் பணி தீவிரம்

சிதம்பரத்தில் ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு.

Update: 2020-10-03 04:06 GMT
சிதம்பரம்,

குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வடலூர் 8-வது வார்டு வெங்கட்ரான்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி அஞ்சலி. இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். இதில் 2-வது குழந்தை அழகம்மாள் (வயது 15). இவள் பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தாள்.

தற்போது அய்யனார் தனது குடும்பத்துடன் சிதம்பரம் அருகே லால்புரம் கிராம சாலையோரத்தில் தங்கியிருந்து, பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். அதுபோல் பூம்பூம் மாடு வைத்தும் பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் அய்யனார் தனது மகள் அழகம்மாளுடன் நேற்று காலை 11 மணியளவில் லால்புரம் பாசிமுத்தான் ஓடைக்கு துணி துவைக்க சென்றார். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பாசிமுத்தான் ஓடையில் தண்ணீர் அதிகமாக ஓடுகிறது. இதையடுத்து அய்யனார் ஓடையின் கரையோரம் அமர்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது அழகம்மாள், எதிர்பாராதவிதமாக ஓடையில் தவறி விழுந்தாள்.

இதில் அவள் ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்டாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அய்யனார், காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டார்.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேசயனன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து பாசிமுத்தான் ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை தேடும்பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நீண்ட நேரமாக தேடியும் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதையடுத்து சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ் விரைந்து வந்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

மேலும் அப்பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்கும் வகையில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மேற்பார்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்