திருச்சி ரெயில் நிலையம் அருகே பரபரப்பு: வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் பகுதியில் திடீர் தீ

திருச்சி ரெயில் நிலையம் அருகே வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-10-04 06:26 GMT
திருச்சி,

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வு காரணமாக குறிப்பிட்ட பகுதிகளுக்கு தெற்கு ரெயில்வே பல சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அவற்றில் சென்னை- மதுரை இடையே இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:02635) ரெயிலும் ஒன்று.

சென்னை எழும்பூரில் பிற்பகல் 1.40 மணிக்கு புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர் வழியாக மாலை 6.35 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடையும்.

அதன்படி, சென்னையில் இருந்து புறப்பட்டு வழக்கமான நேரத்தில் மாலை 6.35 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தது. பின்னர் இங்கிருந்து மாலை 6.40 மணிக்கு மதுரை நோக்கி ரெயில் புறப்பட்டது. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அடுத்த மேம்பாலத்தை கடந்து ரெயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, ரெயிலில் பொருத்தப்பட்டிருந்த மின்சார என்ஜினின் மேற்பகுதியில் உயர்அழுத்த மின்கம்பியை உரசியபடி செல்லும் 25 ஆயிரம் வாட்ஸ் சக்தி கொண்ட மின்கம்பி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால், என்ஜின் தானாக நின்றதால் ரெயில் நின்று விட்டது.

ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளில் ரெயிலில் இருந்த பயணிகள் அலறி அடித்தபடி கீழே இறங்கினர். மேலும் என்ஜின் டிரைவர்கள் உடனடியாக அருகில் உள்ள ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். என்ஜினை மீண்டும் இயக்கியபோது இயங்கவில்லை.

தொழில்நுட்ப வல்லுனர்கள், ரெயில்வே எலக்ட்ரீசியன் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு போலீசார் உடனடியாக விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மின்கம்பியில் கிடந்த பூ மாலையில் என்ஜின் பகுதி கம்பி உரசியபோது தீப்பொறி கிளம்பி தீப்பிடித்தது தெரியவந்தது.

பின்னர் அவர்கள், மின்கம்பியில் கருகியபடி தொங்கிய பூமாலையை அகற்றினர். இதன் காரணமாக பயணிகள் சுமார் 1 மணி நேரம் தவித்தனர். பின்னர் அதே என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்பட்டு 1 மணி நேரம் தாமதமாக இரவு 7.40 மணிக்கு மதுரை நோக்கி புறப்பட்டு சென்றது.

ரெயில் தண்டவாளத்தின் மேலே செல்லும் உயர் அழுத்த மின் கம்பியில் பூமாலையை வீசிய மர்ம ஆசாமி யார்? என ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணையை தொடங்கினர். கிராப்பட்டியில் இருந்து ஜங்ஷன் மேம்பாலம் வழியாக இறுதி ஊர்வலம் சென்ற போது, பூமாலை வீசப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எனவே, மாலை வேளையில் யாருடைய உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்து சென்றனர் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்