தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டது 5 ‘கும்கி’கள் உதவியுடன் வனத்துறையினர் நடவடிக்கை

விராஜ்பேட்டை தாலுகாவில் தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானையை வனத்துறையினர் 5 ‘கும்கி’ யானைகள் உதவியுடன் பிடித்தனர்.

Update: 2020-10-05 21:42 GMT
குடகு,

குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பாலிபெட்டா அருகே ஒசூர் கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து ஒரு காட்டு யானை கடந்த 6 மாங்களுக்கு மேலாக தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. அந்த யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த நிலையில் அந்த காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்படி, வனத்துறையினரும் அந்த காட்டு யானையை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனாலும், காட்டு யானை வனத்துறையினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. போக்கு காட்டி வந்த காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக இறங்கினார்கள்.

கும்கிகள் வருகை

இந்த நிலையில் தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டினர். அவர்கள் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அதனை பின்தொடர்ந்து வந்தனர். பின்னர் காட்டு யானையை பிடிப்பதற்காக துபாரே, மத்திகோடு யானைகள் பயிற்சி முகாம்களில் இருந்து அர்ஜூனா, கோபாலசாமி, கணேசா, ஹர்ஷா, கிருஷ்ணா ஆகிய 5 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன.

அவற்றின் உதவியுடன் வனத்துறையினர் காட்டு யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தேவரபுரா பகுதியில் காபி தோட்டத்தில் காட்டு யானை நிற்பது வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர், கும்கிகள் உதவியுடன் அந்த காட்டு யானையை சுற்றிவளைத்தனர்.

காட்டு யானை பிடிபட்டது

அதன்பின்னர், கால்நடை மருத்துவர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை காட்டு யானை மீது செலுத்தினார். இதனால் அந்த காட்டு யானை சிறிது தூரம் சென்று மயங்கி விழுந்தது. இதையடுத்து, காட்டு யானையை சுற்றி வனத்துறையினர் கயிறு கட்டினர். பின்னர் கும்கிகள் உதவியுடன் காட்டு யானையை லாரியில் ஏற்றும் முயற்சி நடந்தது. ஆனால் லாரியில் ஏறாமல் காட்டு யானை முரண்டு பிடித்தது. இதையடுத்து, காட்டு யானையின் உடலில் கயிறு கட்டப்பட்டு கிரேன் உதவியுடன் லாரியில் ஏற்பட்டது. அதன்பின்னர் அந்த யானை, பந்திப்பூர் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடப்பட்டது.

தொடர் அட்டகாசம் செய்து வந்த காட்டு யானை பிடிபட்டதால் அந்தப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்