வெடிகுண்டு வீசி 2 பெண்கள் கொலை: தென்காசி கோர்ட்டில் வாலிபர் சரண்

நாங்குநேரி அருகே வெடிகுண்டு வீசி 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் தென்காசி கோர்ட்டில் வாலிபர் சரண் அடைந்தார்.

Update: 2020-10-06 00:12 GMT
தென்காசி,

நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த மறுகால்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் அருணாசலம் மனைவி சண்முகத்தாய் (வயது 45), சுப்பையா மனைவி சாந்தி (40). இவர்கள் 2 பேரும் உறவினர்கள்.

சண்முகத்தாய் மகன் நம்பிராஜன், அப்பகுதியைச் சேர்ந்த வான்மதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் வான்மதி குடும்பத்தினர் நம்பிராஜனை கொலை செய்தனர். இதற்கு பழிக்குப்பழியாக நாங்குநேரியில் ஓட்டல் நடத்தி வந்த வான்மதியின் உறவினர்களான ஆறுமுகம், சுரேஷ் ஆகிய 2 பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.

வெடிகுண்டு வீசி கொலை

இந்த இரட்டைக்கொலை தொடர்பாக சண்முகத்தாய் மகன்கள் ராமையா, சங்கர், சாந்தி மகன்கள் இசக்கிப்பாண்டி, ஆறுமுகம் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர். அவர்கள் 4 பேரையும் பழித்தீர்ப்பதற்காக 12 பேர் கொண்ட கும்பல் கடந்த 26-ந் தேதி சண்முகத்தாய், சாந்தி வீட்டிற்குள் புகுந்து நாட்டு வெடிகுண்டு, பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

ஆனால் அங்கு ராமையா உள்பட 4 பேரும் இல்லாததால், சண்முகத்தாய், சாந்தி ஆகியோரை அந்த கும்பல் படுகொலை செய்தனர். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தனிப்படை போலீசார் 12 பேர் கும்பலை தேடி வந்தனர்.

இந்த கொலையில் தொடர்புடைய தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணன், சொரிமுத்து, முருகன் ஆகிய 3 பேர் திருச்சி கோர்ட்டில் ஏற்கனவே சரண் அடைந்தனர். மற்ற குற்றவாளிகளை தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

மேலும் ஒருவர் சரண்

இந்த நிலையில் கொலையில் தொடர்புடையதாக கருதப்படும் பாளையங்கோட்டை குறிச்சியை சேர்ந்த வெள்ளப்பாண்டி மகன் மாடசாமி (33) என்பவர் தென்காசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார்.

அவரை காவலில் வைக்கவும், வருகிற 9-ந் தேதி நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தவும் நீதிபதி பிரகதீஸ்வரன் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்