குமரியில் கல்குவாரிகள் இயங்க அனுமதி - தளவாய் சுந்தரம் தகவல்

குமரி மாவட்டத்தில் கல்குவாரிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தளவாய் சுந்தரம் கூறினார்.

Update: 2020-10-07 06:30 GMT
நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் கல்குவாரிகளை திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலை வகித்தார். கல்குவாரிகளின் உரிமையாளர் சங்க செயலாளர் பால்ராஜ், தலைவர் வர்கீஸ், பொருளாளர் தாஸ் மற்றும் உறுப்பினர்கள் ஆன்டனி, அஜி குமார் கலந்து கொண்டனர்.

அப்போது மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் டி.ஜாண்தங்கம் ஆகியோர் உடன் இருந்தனர். கூட்டம் முடிந்ததும், தளவாய்சுந்தரம் கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளது. இவை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை-எளிய கட்டிட தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. நமது மாவட்டத்தில் நில அதிர்வு தாங்கு மண்டலம் அறிவிக்கப்பட்டதால், கடந்த 5-4-19 முதல் குவாரிகள் இயங்காமல் உள்ளது.

இதனால் மாநகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் சாலைப்பணிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செயல்படுத்த முடியாதநிலை இருந்து வருகிறது. இதனால் அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து கல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு வருவதால், கட்டுமான பொருட்களின் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்களும், தொழிலாளர்களும் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தொழிலாளர் நலனில் அக்கறை கொண்ட தமிழக முதல்-அமைச்சர் கவனத்துக்கு, நமது மாவட்ட கல்குவாரி மற்றும் கட்டிட தொழிலாளர்களின் வாழ்வாதார சூழ்நிலையினை எடுத்து சென்றதன் அடிப்படையில், மேற்கண்ட பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மூலம் நமது மாவட்டத்தில் நில அதிர்வு தாங்குமண்டலம் வரையறுக்கப்பட்டு, அதற்கான அரசாணை மத்திய சுற்றுச்சூழல் துறையின் மூலம் மத்திய அரசாணையில் 22-9-20 அன்று வெளியிடப்பட்டது.

கல்குவாரி தொழிலில் ஈடுபட்டுள்ள ஏழை-எளிய பாமர மக்கள் மற்றும் இத்தொழிலில் மறைமுகமாக ஈடுபட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும், மாவட்ட கலெக்டர் கனிம துறையின் விதிகளுக்குட்பட்டு, கல்குவாரிகள் இயங்க நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொழிலாளர்களின் நலன் கருதி அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தினை உருவாக்கினார். இதில், கட்டுமான தொழிலாளர் நலவாரியம் உள்ளிட்ட 17 வகையான நலவாரியங்கள் செயல்பட்டு வருகிறது.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கட்டுமான தொழிலாளர்களுக்கு கொரோனா காலத்தில் நிவாரணஉதவியாக 2 தடவையாக தலா ரூ.1,000-ம், 15 கிலோஅரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்டஉணவு பொருட்களும் வழங்கப்பட்டது. தற்போது கனிம வளத்துறையின் விதிகளுக்குட்பட்டு, கல்குவாரிகள் மீண்டும் இயங்குவதற்கான அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்