கூடுதல் தண்ணீர் திறப்பால் வைகை அணை நீர்மட்டம் 60 அடியாக சரிவு

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் 60 அடியாக சரிந்தது.

Update: 2020-10-07 11:54 GMT
ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்தது. இதன்காரணமாக ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 63 அடியாக உயர்ந்தது. இதைத்தொடர்ந்து, வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாத காரணத்தால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. நேற்றைய நிலவரப்படி வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 855 கனஅடியாக குறைந்து விட்டது. நீர்வரத்தை விட இருமடங்குக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து கொண்டே வருகிறது.

தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியாக குறைந்துள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 3 ஆயிரத்து 614 மில்லியன் கன அடியாக இருந்தது. இவ்வாறு நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். அவர்கள் வடகிழக்கு பருவமழையை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

மேலும் செய்திகள்