மேலப்பாளையம் உழவர் சந்தை மீண்டும் திறப்பு

மேலப்பாளையம் உழவர் சந்தை மீண்டும் திறக்கப்பட்டது.

Update: 2020-10-07 23:36 GMT
நெல்லை,

நெல்லை மேலப்பாளையம் உழவர் சந்தை கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டது. அதன் பிறகு காய்கறிகள் நடமாடும் வேன் மூலம் அந்த பகுதியில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்துள்ளது. இதையடுத்து பாளையங்கோட்டை மகாராஜா நகர் உழவர் சந்தை கடந்த 5-ந் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

மாவட்ட கலெக்டர் ஷில்பா ஆலோசனை பேரில் வேளாண்மை துறை துணை இயக்குனர் (விற்பனை பிரிவு) முருகானந்தம் உத்தரவின் பேரில் மேலப்பாளையம் உழவர் சந்தை நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. பொதுமக்கள் ஆர்வமாக வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். அங்கு விற்பனை செய்யும் வியாபாரிகளையும், உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்களையும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

வாரச்சந்தை திறப்பு

மேலும் மேலப்பாளையம் ரவுண்டானாவில் இருந்து டக்கரம்மாள்புரம் செல்லும் சாலையில் மாநகராட்சி சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தை வாரத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் திறக்கப்படும். இங்கு ஆடு, மாடுகள், கோழிகள் மற்றும் மீன், கருவாடு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யப்படும். குறிப்பாக அதிக அளவு ஆடுகள் இந்த சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவது வழக்கம் ஆகும். கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மேலப்பாளையம் சந்தை மூடப்பட்டது.

இந்த நிலையில் மேலப்பாளையம் சந்தையை 7 மாதங்களுக்கு பிறகு மாநகராட்சி ஊழியர்கள் திறந்தனர். இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், தென்காசி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், ஆலங்குளம், ரெட்டியார்பட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், மதுரை, திருமங்கலம் மற்றும் பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை இந்த சந்தைக்கு கொண்டு வந்தனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் கொண்டு வரப்பட்டன. இவற்றை வாங்குவதற்கும் ஏராளமான வியாபாரிகள் குவிந்தனர். அவர்கள் குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை ஆடுகளை வாங்கிச் சென்றனர்.

மேலும் செய்திகள்