திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்கள் சாலை மறியல் - புதிதாக வீடு கட்டித்தர கோரிக்கை

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் தீ விபத்தால் வீடுகளை இழந்தவர்கள், புதிதாக வீடுகள் கட்டித்தரக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-07 22:45 GMT
திருச்சி,

திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்.ஜி.ஆர்.நகரில் 100-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. கடந்த 3 நாட்களுக்கு முன்பு, கியாஸ் சிலிண்டர் கசிவால் அது வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் அங்கிருந்த செல்வராஜ், மாணிக்கம் உள்ளிட்ட 17 பேரின் வீடுகள் எரிந்து சாம்பலானது. விபத்தால் வீட்டில் இருந்த டி.வி., கட்டில், பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசியல் கட்சியினர், தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் நிவாரண உதவிகளை வழங்கினர். ஆனாலும், தங்களுக்கு அதே இடத்தில் புதிதாக வீடுகள் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மாற்று இடமாவது வழங்க வேண்டும் என்று கோரி நேற்று காலை 10.45 மணிக்கு திடீரென சங்கிலியாண்டபுரம் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, 3-வது முறையாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், 3 நாட்களாக பட்டினியாக இருப்பதாகவும், அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாதது ஏன்? என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கையில் ஏந்தி இருந்தனர். சாலை மறியல் காரணமாக, அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த உதவி போலீஸ் கமிஷனர்கள் ரவிஅபிராம், முருகேசன் மற்றும் பாலக்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீஸ் தரப்பில், தங்களுடன் 4 பேர் வாருங்கள். அதிகாரிகளிடம் அழைத்து செல்கிறோம். அவர்களிடம் உங்கள் கோரிக்கையை சொல்லுங்கள் என்றனர்.

இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன், அந்த பகுதியில் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்