கிசான் திட்ட முறைகேடு வழக்கு: “விவசாயிகள் சுரண்டப்படுவது ஆரோக்கியத்தின் அடையாளம் இல்லை” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை

பிரதம மந்திரியின் கிசான் திட்ட முறைகேடு வழக்கு விசாரணையின் போது, “அனைவருக்கும் உணவு ஊட்டும் விவசாயிகள் சுரண்டப்படுவது ஆரோக்கியத்தின் அடையாளம் இல்லை” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கள் வேதனை தெரிவித்தனர்.

Update: 2020-10-08 06:00 GMT
மதுரை,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த தொட்டனாம்பட்டியை சேர்ந்த சிவபெருமாள், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது பிரதம மந்திரியின் கிசான் திட்டம் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தின்கீழ் தகுதியான வங்கி கணக்கு பராமரித்து வரும் விவசாயிகள் யாருக்கும் இதுவரை வங்கிக்கடன், நிதி உதவி வழங்கவில்லை. இதற்கு வேடசந்தூர் தாலுகா உதவி விவசாய அலுவலர்தான் காரணம்.

அவர் விவசாயத்தில் ஈடுபடாத சிலரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, அவர்களை பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் சேர்த்து உள்ளார். எங்களை தகுதியற்றவர்கள் பட்டியலில் சேர்த்தார். இந்த திட்டத்தின்கீழ் அரசு நிதி உதவியை பெறுவதில் ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்கள் தலையீடும் உள்ளது. அவர்கள் பரிந்துரைத்தால் மட்டுமே நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தொகுதி எம்.எல்.ஏ. பரிந்துரை கடிதம் கொண்டு வர வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கிறார்கள். இதுகுறித்து 15.4.2020, 27.4.2020, 18.5.2020, 12.8.2020 ஆகிய தேதிகள் உள்பட பல்வேறு நாட்களில் புகார்களை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியும், எந்த பலனும் இல்லை.

எனவே விவசாயிகளுக்கான பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த வேடசந்தூர் உதவி விவசாய அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். தகுதியான விவசாயிகளுக்கு அரசு நிதி உதவி வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “விவசாயிகளுக்காக மத்திய-மாநில அரசுகள் வழங்கும் திட்டங்கள் என்னென்ன? அதற்காக எவ்வளவு தொகை வழங்கப்பட்டது? எத்தனை விவசாயிகள் இந்த திட்டங்களின்கீழ் பயனடைந்து உள்ளனர்? விவசாயிகளுக்காக மானியமாக எவ்வளவு தொகை வழங்கப்பட்டது? இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள்தான் பயன் பெறுகிறார்கள் என்பதை உறுதி செய்ய மத்திய-மாநில அரசுகள் பின்பற்றும் நடைமுறை என்ன? பிரதம மந்திரியின் கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? நடவடிக்கையின் தற்போதைய நிலை என்ன? மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் விவசாயிகளுக்கான திட்டத்தில் மோசடி செய்ததாக எத்தனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

மேலும், “அனைவருக்கும் உணவு ஊட்டும் விவசாயிகள் சுரண்டப்படுவது ஆரோக்கியத்தின் அடையாளம் இல்லை. நாள் முழுவதும் ஒட்டிய வயிறுடன் உழைக்கும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய இயலாத நிலை உள்ளது. வேலை ஆட்களுக்கான ஊதியம், சாகுபடி செலவு என அனைத்தையும் கருத்தில் கொண்டு விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படாதது வருத்தத்திற்கு உரியது” எனவும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

விசாரணை முடிவில், “இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகளின் விவசாயத்துறை செயலாளர்கள், தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஆகியோரை இந்த கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கில் சேர்க்கிறது. அவர்கள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்