தத்தனேரி பகுதியில் நள்ளிரவில் வாகனங்களை சேதப்படுத்திய ரவுடி கும்பல் - பொதுமக்கள் அச்சம்

மதுரை தத்தனேரி பகுதியில் நள்ளிரவில் வாகனங்களை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2020-10-08 06:00 GMT
மதுரை,

மதுரை தத்தனேரி பகுதியில் நள்ளிரவில் வாகனங்களை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

மதுரை திடீர்நகர் பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நள்ளிரவில் ரவுடிகளின் அட்டகாசத்தால் ஆட்டோ, வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட ரவுடிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இது குறித்து திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பே மதுரை செல்லூர் தத்தனேரி பகுதியில் மீண்டும் அதுபோல் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

தத்தனேரி மின் மயானம் அருகே உள்ள பாக்கியநாதபுரத்தில் நேற்று முன் தினம் இரவு மதுபோதையில் சுற்றிய மர்ம கும்பல் அப் பகுதியில், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, சிறிய சரக்கு வாகனம், இருசக்கர வாகனங்கள், வேன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை அடித்து சேதப்படுத்தினர். தடுக்க வந்த பொதுமக்களையும் அவர்கள் தாக்க முயன்றனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த செல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். மேலும் இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நகர் மக்கள் அச்சத்தில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் செயல்படும் இதுபோன்ற கும்பலை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. எனவே இரவு நேரங்களில் போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்