கொல்லிமலையில் விவசாயி கொலை: மருமகன்கள் உள்பட 5 பேர் கைது - பிணைய பத்திரத்தை தரமறுத்ததால் கொன்றதாக வாக்குமூலம்

கொல்லிமலையில் விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மருமகன்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பிணைய பத்திரத்தை தர மறுத்ததால் கொன்றதாக அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2020-10-08 22:00 GMT
சேந்தமங்கலம்,

கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள தின்னனூர் நாடு ஊராட்சியை சேர்ந்தவர் சாமிதுரை. மிளகு விவசாயி. இவருக்கு பானுமதி, சரோஜாதேவி என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி பானுமதி கருத்து வேறுபாடு காரணமாக சாமிதுரையை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் சாமிதுரை தனது 2-வது மனைவி சரோஜாதேவியுடன் பெருமாபாளையத்தில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 5-ந் தேதி கொல்லிமலைக்கு சென்று வருவதாக கூறிச்சென்ற அவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர் 6-ந் தேதி கொல்லிமலை தேவானூர்நாடு வனப்பகுதியில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து வாழவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், நாமக்கல் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

வாழவந்திநாடு பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி, அதிலிருந்த 5 பேரிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சாமிதுரையின் 2-வது மனைவியின் மகள் திவ்யாவின் கணவர் ராஜ்குமார் (வயது 25), முதல் மனைவியின் மகள் ரஞ்சிதாவின் கணவர் பிரசாந்த் (27) மற்றும் இவர்களது நண்பர்கள் கார்த்திக், பழனியப்பன், டிரைவர் முருகேசன் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் சாமிதுரையை கல்லால் தாக்கி கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர்கள் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

சரோஜாதேவியின் மகள் திவ்யாவின் கணவர் ராஜ்குமாருக்கு, சக்கரைப்பட்டியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான 35 சென்ட் நிலத்தை சாமிதுரை ரூ.30 ஆயிரத்துக்கு குத்தகைக்கு வாங்கி கொடுத்துள்ளார். 6 மாதங்கள் கழித்து அந்த நிலத்தை தர்மலிங்கத்தின் உறவினர் செல்வராஜ் என்பவர் திரும்ப கேட்டார். மேலும் ரூ.37 ஆயிரத்தை ராஜ்குமாரிடம் கொடுத்து, நிலத்தையும், பத்திரங்களையும் ஒப்படைக்குமாறு தெரிவித்தார்.

இதையடுத்து ராஜ்குமார், தனது மாமனார் சாமிதுரையிடம் ரூ.37 ஆயிரத்தை கொடுத்து பத்திரங்களை திரும்பக்கேட்டார். ஆனால் சாமிதுரை அனைத்து பத்திரங்களையும் கொடுத்துவிட்டு, ஒரே ஒரு பிணைய பத்திரத்தை மட்டும் வழங்கவில்லை. இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 5-ந் தேதி கொல்லிமலையில் குத்தகைக்கு வேறு நிலம் இருப்பதாக கூறி சாமிதுரையை ராஜ்குமார் ஆம்னி வேனில் அழைத்து சென்றார். இவர்களுடன் ராஜ்குமாரின் கூட்டாளிகளான பிரசாந்த், கார்த்திக், பழனியப்பன், முருகேசன், விஜயகுமார், சகாதேவன் ஆகியோரும் சென்றனர். தேவானூர்நாடு வனப்பகுதியில் வைத்து, பிணைய பத்திரத்தை கேட்டு ராஜ்குமார் தகராறில் ஈடுபட்டார். சாமிதுரை அதனை வழங்க மறுத்ததால், ராஜ்குமார், பிரசாந்த் உள்பட 7 பேரும் சேர்ந்து சாமிதுரையை தாக்கினர்.

இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். இதில் சாமிதுரை ரத்த வெள்ளத்தில் பிணமானார். இதையடுத்து அவர்கள் 7 பேரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த தகவல் அவர்கள் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து சாமிதுரையின் மருமகன்களான ராஜ்குமார், பிரசாந்த் மற்றும் கார்த்திக், பழனியப்பன், முருகேசன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஆம்னி வேனை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள விஜயகுமார், சகாதேவன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்