பேரிடர் கால தடுப்பு பணியில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும் - மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ் லக்கானி பேச்சு

பேரிடர் காலங்களில் அனைத்து துறை அரசு ஊழியர்களும் இணைந்து தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராஜேஷ் லக்கானி கூறினார்.

Update: 2020-10-09 05:15 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் வேலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலாளருமான ராஜேஷ் லக்கானி கலந்துகொண்டு பேசியதாவது:-

வடகிழக்கு பருவமழையால் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 364 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் 273 மில்லிமீட்டர் அளவிலேயே மழை பெய்துள்ளது. இது வழக்கத்தைவிட 26 சதவீதம் குறைவானதாகும். வேலூர் மாவட்டத்திற்கு வடகிழக்கு பருவமழையால் மட்டுமே அதிகளவு மழை கிடைக்கும்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த மழையினை கணக்கில் கொண்டு பார்த்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக 34 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிக மற்றும் மிக அதிக அளவில் பாதிக்கப்படக் கூடிய இடங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை. வெள்ளத்தால் பாதிக்கக்கூடிய பகுதிகளுக்கு 180 முதல் நிலை பொறுப்பாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். தாசில்தார் தங்கள் பகுதியில் உள்ள பொக்லைன் எந்திரம், டிராக்டர் உரிமையாளர்கள் விவரத்தை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து ரேஷன் கடைகளிலும் 2 மாதத்திற்கான பொருட்கள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பொது மக்களை தங்க வைக்க தேவையான அடிப்படை வசதிகளுடன் 42 நிவாரண மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பொதுப்பணித் துறையைச் சார்ந்த அலுவலர்கள் மழை, வெள்ளம், புயல் போன்ற சமயங்களில் மக்கள் தங்கும் இடங்களிலும் பள்ளிக்கூடங்கள், சமுதாய கூடங்கள் மற்றும் தனியார் திருமண மண்டபத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அவை நல்ல முறையில் பொதுமக்கள் தங்கும் வகையில் உள்ளதா என்று உறுதி செய்ய வேண்டும். பேரிடர் காலங்களில் அனைத்து அரசு ஊழியர்களும் இணைந்து தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், மாநகராட்சி கமிஷனர் சங்கரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன், உதவி கலெக்டர்கள் கணேஷ், ஷேக்மன்சூர், வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் செந்தில்வேல், பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் சுஜாதா, தாசில்தார்கள் உள்பட பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்