குடவாசல் அருகே ஊராட்சி தலைவர் வெட்டிக்கொலை: லால்குடி கோர்ட்டில், 4 பேர் சரண்

குடவாசல் அருகே ஊராட்சி தலைவரை வெட்டிக்கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் லால்குடி கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர்.

Update: 2020-10-09 22:30 GMT
திருச்சி,

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள மணவாளநல்லூர் ஊராட்சி தலைவராக இருந்தவர் கணேசன் (வயது 50). தி.மு.க.வை சேர்ந்த இவர், நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் எரவாஞ்சேரி கடைத்தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கடைத்தெரு இருளில் மூழ்கியிருந்தது.

அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர், திடீரென கணேசனை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினார்கள். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கிய கணேசனை, அக்கம், பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார்.

இதுபற்றி எரவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் ஊராட்சி தலைவர் கொலை வழக்கு தொடர்பாக, குடவாசல் அருகே திருவீழிமிழலை பகுதியை சேர்ந்த ஜோதியின் மகன் தென்னரசு (30), ஐயப்பனின் மகன் காளீஸ்வரன் (24), கூந்தலூர் பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேனின் மகன் முபின் உசேன் (23), மணவாளநல்லூரை சேர்ந்த மகாலிங்கத்தின் மகன் ஜெகன் (32) ஆகியோர் நேற்று காலை லால்குடி கோர்ட்டில் நீதிபதி விஜயபாரதி முன்னிலையில் சரண் அடைந்தனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய நீதிபதி, 4 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 4 பேரும் லால்குடி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்