தனுஷ்கோடி சாலையை மணல் மூடாமல் இருக்க மரத்தடுப்பு வேலி - பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்குமா?

தனுஷ்கோடி சாலையை மணல் மூடாமல் இருக்க மரச்சட்டத்தினால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த வேலி பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்குமா? எனவும் கேள்வி எழுந்துள்ளது.

Update: 2020-10-09 22:30 GMT
ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடியானது இயற்கையாகவே கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று வீசக்கூடிய பகுதி ஆகும். ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலும் தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் மிக அதிகமாக இருக்கும். காற்று வீசும் சீசனில் கடற்கரை மணலானது பறந்து சாலையில் பல இடங்களில் பரவி சாலையை மூடிவிடும். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படும். சாலையில் பரவிய மணலை அவ்வப்போது எந்திரம் மூலம் அகற்றுவது வழக்கம்.

இந்த நிலையில் பலத்த காற்றால் கடற்கரை மணல் தனுஷ்கோடி சாலைக்கு வருவதை தடுப்பதற்காக தனுஷ்கோடி கம்பிப்பாடு பகுதியில் உள்ள சாலையோரத்தில் மரச்சட்டத்தினாலான தடுப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதுபற்றி தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தனுஷ்கோடி பகுதியில் பலத்த காற்றால் சாலையை மணல் மூடாமல் இருக்க சோதனை ஓட்டமாக சாலையோரத்தில் 3 இடங்களில் சுமார் 300 மீட்டர் நீளத்தில் 5 அடி உயரத்தில் மரச்சட்டத்தினாலான தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் ஓரிரு நாளில் முடிவடைந்துவிடும். காற்றால் மணல் பரந்து சாலைக்கு வருவதை தடுப்பதற்காக ரூ.10 லட்சம் நிதியில் இந்த தடுப்பு வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

கோவா கடற்கரை மற்றும் வெளிநாடுகளில் ஒரு சில கடற்கரை பகுதியில் இவ்வாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதுபோன்று தனுஷ்கோடி பகுதியிலும் அமைக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலையோரத்தில் மணல் சாலையை மூடுவதை தடுக்க பனை மட்டையால் ஆன தடுப்பு வேலி அமைக்கப்பட்டு ஒரு சில மாதங்களிலேயே சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது கம்பிப்பாடு பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இந்த தடுப்பு வேலி பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்குமா? என்பது போக போகத்தான் தெரியும் என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்