தண்ணீர் திறக்க வலியுறுத்தி உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

தண்ணீர் திறக்க வலியுறுத்தி உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-09 22:15 GMT
கள்ளப்பெரம்பூர்,

காவிரியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. குறுவை சாகுபடி முடிந்து தற்போது விவசாயிகள் சம்பா விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு போக விவசாய சாகுபடிக்காக கரூர் மாவட்டம் மாயனூரில் இருந்து தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த நீரானது திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டையில் உள்ள பெரிய ஏரியில் நிரம்பும். அதன் பின்னர் செங்கிப்பட்டி பகுதிகளுக்கு தண்ணீர் வருவது வழக்கமாகும்.

இந்த ஆண்டு கடந்த மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வரை செங்கிப்பட்டி, சுரக்குடிபட்டி, தேவராயநேரி, நவலூர், ராயப்பன்பட்டி, வெண்டயம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட ஏரிகள் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளன. இதனால் உய்யக்கொண்டான் வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை என அந்த பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் புதுக்குடி பகுதியில் உய்யக்கொண்டான் வாய்க்காலில் இறங்கி விவசாயிகள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பூதலூர் தாசில்தார் சிவக்குமார், திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சித்திரவேல், ஆற்றுபாசன கோட்ட அதிகாரி கண்ணன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது உடனடியாக தட்டுப்பாடின்றி தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் வியாகுலதாஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பூதலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்