தூத்துக்குடியில், மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து ஒற்றைக் காலில் நின்று வியாபாரிகள் போராட்டம்

தூத்துக்குடி சிதம்பரநகரில் மார்க்கெட்டை பூட்டி சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து நேற்று வியாபாரிகள் ஒற்றைக்காலில் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-10-11 23:31 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி சிதம்பரநகரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மார்க்கெட் உள்ளது. அங்கு 60க்கும் மேற்பட்ட கடைகள் ஒப்பந்த முறையில் அமைக்கப்பட்டு மாநகராட்சி நிர்வாகம் வாடகை பெற்று வருகிறது. இந்த நிலையில் அந்த இடத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. அதற்காக டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல் கடந்த எட்டாம் தேதி அதிகாலை 5 மணி அளவில் மாநகராட்சி அதிகாரிகள் அந்த மார்க்கெட்டை பூட்டி சீல் வைத்தனர்.

வியாபாரிகள் போராட்டம்

ஏற்கனவே இது தொடர்பாக வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மார்க்கெட்டில் உள்ள கடைகளை திறக்க உத்தரவிட்டார். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் மார்க்கெட்டை திறக்கவில்லை. இதனால் மார்க்கெட்டில் கடை வைத்துள்ள வியாபாரிகள் மார்க்கெட் முன்பு அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அது போல் நேற்றும் வியாபாரிகள் கையில் கோரிக்கைகளை வைத்தபடி ஒற்றைக்காலில் நின்று மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்