மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை

மயிலாடுதுறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.20 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

Update: 2020-10-12 00:07 GMT
குத்தாலம்,

மயிலாடுதுறை அருகே வழுவூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் வசந்தா(வயது 64). இவர், சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவர் இறந்த பின்பு வசந்தா தனியாக வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வசந்தாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்று விட்டார்.இந்த நிலையில் வசந்தாவின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்ட அக்கம், பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வசந்தாவுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வசந்தா, சென்னையில் இருந்து விரைந்து வந்தார். பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.20 ஆயிரம் மற்றும் எல்.இ.டி. டி.வி. ஆகியவை கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது.

வசந்தா வெளியூர் சென்று விட்டதை தெரிந்து கொண்ட மர்ம மனிதர்கள், வசந்தா வீட்டில் பூட்டி இருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு பீரோவில் இருந்த நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வசந்தா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பொதுமக்கள் பீதி

கடந்த சில நாட்களுக்கு முன்பு கழனிவாசல் கிராமத்தில் வயதான தம்பதியை தாக்கி நகை-பணம் கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது. கிராமப்புற வீடுகளில் தனியாக முதியவர்கள் வசித்தால் அவர்களை நோட்டமிட்டு கொள்ளை அடிக்கும் சம்பவம் தற்போது அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்